search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென் மேற்கு பருவமழை"

    பஞ்சலிங்க அருவியின் நீராதாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
    உடுமலை:

    உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பஞ்சலிங்கஅருவி உள்ளது. இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சிமலைகளில் உள்ள கொட்டை ஆறு, பாரப்பட்டி ஆறு, வண்டி ஆறு, குருமலை ஆறு, கிழவிபட்டிஆறு, உப்புமண்ணம்பட்டி ஆறு உள்ளிட்ட ஆறுகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது.

    பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்வதற்காகவும் இயற்கை சூழலை ரசிப்பதற்காகவும் நாள்தோறும் ஏராளமான வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.

    இந்த நிலையில் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் மேற்கு தொடர்ச்சிமலைகளில் வறட்சி நிலவி வந்தது. இதன் காரணமாக அங்குள்ள சிற்றாறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக அருவிக்கு வந்துகொண்டிருந்த நீர்வரத்து முற்றிலுமாக நின்று விட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் வனப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து வனப்பகுதியை நீராதாரமாகக் கொண்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியின் நீராதாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதாக தெரிகிறது. இதனால் அருவியின் நீர்வரத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதுடன் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. இதன் காரணமாக பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அருவி பகுதி சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. அத்துடன் அருவியின் நீர்வரத்தை வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் இணைந்து இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.

    ×